ஹாஜீமூஸா 1878
இயக்குனர் சசிக்குமார் நாடோடிகள் படத்தில் இப்படி கேட்பார் “உங்களுக்கு உங்கள் முன்னோர்களின் பெயர், விபரம் எத்தனை தலைமுறை வரை தெரியுமென? எனக்கு இந்த கேள்வி முக்கியமானதாக படுகிறது. நமது தாத்தாவின், அப்பாவின் பெயர் என்ன? அவர் என்ன வேலை பார்த்தார்? எந்த ஊரில் வாழ்ந்தார்கள்? இந்த கேள்விக்கு நம்மிடம் எத்தனை பேரிடம் விடை உண்டு. நம் அப்பாவிடமோ அம்மாவிடமோ கேட்கலாம். அவர்களும் திட்டவட்டமில்லாமல் பதில் சொல்லாம். அவர்களிடம் மழுப்பலாய் தான் பதில் உண்டு. ஒருவேளை அவர்கள் மரித்திருந்தால் அந்த தரவுகளும் மரித்துப் போயின.
ஆயிரத்து தொள்ளாயிரங்களின் தொடக்கத்தில் மதுரை ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் கட்டுவதற்கு கூலி வேலைக்கு போன என் ஆயியை பற்றி என்னிடம் ஒரு விபரமும் இல்லை. பாலத்தை கடக்கும் பொழுதெல்லாம் அவளின் ஒர்மை வருகிறது. முகம் தெரியாத அவளின் உழைப்பு இந்த பாலத்தில் உறைந்திருக்கிறது. எனக்கும் இந்த பாலத்திற்கும் ரத்த சம்பந்தம் உண்டு. இப்படியான ஒர்மைகள் நம் ஒவ்வொருவரிடமும் உண்டுதானே. ஏன் நாம் அவற்றை தேடவில்லை?.
தமிழர்களுக்கு ஏன் ஆவனங்களின் மீதும் வரலாற்றின் மீதும் இத்தனை அலட்சியம், வெறுப்பு. நம் தோல்விகளே இங்கிருந்து தான் தொடங்குகின்றனவோ என்ற அழுத்தமான கேள்வி எனக்குண்டு. நம் கண்முன்னே “பிரம்மாண்டமாய்” விரிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய வரலாற்றுக்கு வயது ஐந்நூறு சொச்சம் தான். ஜெர்மானியர்களும் அப்படியே. முந்நூறு வருட மலையாளிகள் ”முறையாய்” தொகுத்திருக்கிறார்கள் தம் வரலாற்றை. இரண்டாயிரம் வருட வரலாறுடையவர்களுக்கு தன் நூறு வருட வாழ்வு கூடத் தெரியாது.
மதுரைக்கு வருபவர்கள் ஒரு விளம்பரத்தை பார்த்திருப்பார்கள் “ஹாஜி மூசா ஜவுளிக்கடை {கடையென்பது அடிக்கபட்டு ஜவுளி கடல் என எழுதப்பட்டிருக்கும்} ஸ்தாபிதம் ஆயிரத்தி எந்நூற்றி எழுபத்தியெட்டு என்று. மதுரையில் ஒரு வடக்கத்திய சேட் நிறுவனத்திற்கு நூற்றி முப்பத்திரெண்டு வருட ”வரலாறு” உண்டு
மறைந்த மார்க்சீய ஆய்வாளர் கோ.கேசவன் ஒரு உரையாடலின் பொழுது சொன்னார் “வடகத்திக்காரர்கள் இங்கே வந்து நூற்றம்பது வருடமாக போகிறது. ஆனால் இன்னும் அவர்கள் நேமிசந்த். ஜெயந்திலால் என்று தான் பேர் வைத்துகொள்கிறார்கள். அவர்கள் சாமியை தான் கும்பிடுகிறார்கள். இசக்கியையோ, முனியாண்டியையோ கும்பிடவில்லை. தன் மண்ணை விட்டு வெகுதூரத்திலிருந்தாலும் தன் வேரை மறந்துவிடவில்லை மாறாக தமிழர்கள் தான் தினேஸ், ஹரிஸ், பிரியங்கா, மோனிசா என பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். ராகவேந்திரா, சீரடி சாய்பாபா என அலைகிறார்கள்”
முன்பு தமிழர்களின் பெயர் சூட்டுதல்களில் கலாச்சாரம் இருந்தது. நிலபரப்பு இருந்தது. வேர் இருந்தது. தினேஸிலும். மோனிசாவிலும் என்ன வேர் உண்டு. என் நண்பர் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர். தன் மகளுக்கு பெயர் சூட்டினார் மித்ரா என்ற நல்லம்மை. நல்லம்மை கோப்புகளில் உறங்குகிறாள். மித்ராவே விட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறாள். மித்ராக்கள் எப்பொழுதும் நமக்கு” தோழிகளில்லை”. எப்பொழுது அறிவார் என் நண்பர்.
நமது கலாச்சாரம் இழிவு என்று எவர் கற்றுக் கொடுத்தார். கறுப்பு, அசிங்கம் அமங்கலம் என சொல்லியவர் எவர்?, முனியாண்டியும், பாண்டிச்சாமியும், இசக்கி அம்மையும் எப்படி புறந்தள்ளப்பட்டார்கள்?. வட்டார வழக்கு எப்பொழுது கைவிடப்பட்டது?, எப்பொழுது நாம் மொன்னையாக பேச தொடங்கினோம்?, தண்டட்டி போட்ட அம்மாச்சிகள் ஹாலுக்கு வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது எப்போது?, நமது நாட்டுப்புற கதை சொல்லியை கார்டூன்கள் ஜெயித்தது எப்பொழுது?, பூம் பூம் மாடுகளை கடைசியாக நாம் பார்த்தது எப்பொழுது?, புரோட்டா நம் உணவுகளை தோற்கடித்தது எப்பொழுது?, பதநீர் பானைகளை கோலாக்கள் உடைப்பது எங்கனம்?, கடைசியாக நம் பட்டம் பறந்தது எந்த பருவத்தில்?, கடைசியாக நம் கதை கேட்டு உறங்கிய ராத்திரியெது?, நாம் குழந்தைகளை கதை சொல்லி உறக்கியது எப்பொழுது?, கடைசியாக நாம் அம்மாச்சிகளோடு ஆத்மார்த்தமாக பேசியது எப்பொழுது?, வீட்டிற்கு வந்தவர்களை சாப்பிடாமல் திருப்பி அனுப்ப எப்பொழுது பழகினோம்?, ஜவ்வு மிட்டாய்காரன் வருவதுண்டா நமது அபார்ட்மெண்ட் தெருக்களில்?, கிளியா கிளியாவில் எங்கே ஒளியும் நம் பிள்ளைகள்?
எல்லாவற்றையும் இழந்து போனோம் நண்பர்களே
வரலாறு ஒரு வியாபாரியெனில் அவனிடம் நாம் சகலவற்றையும் விற்று ஒரு ”சதுரபெட்டி” வாங்கியிருக்கிறோம் நண்பர்களே. எப்பொழுதும் அனையா ”சதுரப்பெட்டி”.
காலம் எனும் சூதாட்டக்காரனிடம் எல்லாம் தோற்று அம்மனமாய் நிற்கிறோம். குறைந்த பட்சம் தன் சமூகத்தின் நூறுஆண்டுகால வரலாற்றை புரிந்து கொண்டவர்களாலயே தன்னையும் தன் சமூகத்தையும் விளங்கி கொள்ளமுடியும் என்பார் மாவோ.
நம் வரலாற்றை, பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை, மொழியை, தொன்மத்தை, ஐதிகங்களை அறிவது, பயில்வது நம்மை நாமே புரிந்து கொள்வது, ”வேர்” அறிந்து விட்டால் வேறொன்றும் நம்மை அனுகாது. பசலிசெடி எங்கு வேண்டுமானாலும் படரும் என்பது விதி.
நம் உளவியல் சிக்கலுக்கு ஆஸ்திரிய சிக்மண்ட் பிராய்டால் தீர்வு சொல்ல முடியாது. அதற்கு மருந்தும் தீர்வும் இங்கேதான். சங்க பாடல்களில் வருகிற பாடனும் பாடினியும் நிகழ் காலத்தில் கேரள விதிகளில் யாழ் இசைத்து போகிறார்கள்.
பெரு நகர சாலைகளிலும் , அடுக்கங்களிலும் இல்லை நம் வேர்கள். அதற்கு நாம் திரும்பி போக வேண்டும். நாம் இது வரை கவனியாததை அல்லது கவனியாதது போல் பாசாங்கு செய்ததை அவதானிக்க வேண்டும். நமது சேந்திகளிலும் பரன்களிலும் அது இருக்கிறது. கிராமங்களில் இருக்கும் நம் வீட்டு குலசாமிகளிடம் இருக்கிறது. நம் ஆயிகளின் மொழியில் இருக்கிறது. வீட்டில் எரவாரமிருந்தால் அதில் கை வைத்து தடவி பார்த்தால் அது தட்டுப்படும். நமது சொல்வடைகளில் அது தென்படும். நம் வீட்டு சியான்களின் முக சுருக்கங்களிலிருக்கிறது அது. மைதாஸ் தொட்டதெல்லாம் பொண்னெண்றால் நாம் ”புழங்குவது”. அத்தனையும் வரலாறு நன்பர்களே
இரண்டாயிரம் வருடத்திற்கு முன் ”மோப்ப குழையும் அனிச்சம்” சொன்னவர்களுக்கு ஹோட்டல் மேனஜ்மென்ட் கற்று தருமோ விருந்தோம்பல். அகம் புறம் என அன்றைக்கே பிரித்து வாழ்ந்தவர்களுக்கு கனவான்கள் கற்று தருவார்களோ ஸ்பேஸ் தியரி. இட்டுக்கட்டாத, வலிந்து சொல்ல அவசியமில்லாத, உணர்ச்சி வசப்பட தேவையில்லாத பெரும் வரலாறு உண்டு நம்மிடம்.
தொல்குடிகள் நாம் எங்கே தொலைந்து போனோம் என்பதே கேள்வி தொலைந்தவர்கள் தொலைத்தவற்றை தேடும் தருனம் இது.
- சாம்ராஜ்
Comments
Post a Comment